தெய்வத்தை எல்லாரும் ஏதோ ஒரு வகையில் வழிபடுகிறோம், அது மனித இயல்பு.  தெய்வம் தன்னைக் காட்டிலும் சிறந்தது, பெரியது,வலிமை மிக்கது, அன்பும் பரிவும் அருளும் கொண்டது, நம் கோரிக்கைகளை ஏற்று விரும்பிய நன்மைகளைத் தரக்கூடியது, நன் மதிப்பிற்குரியது, நம் மூதாதையாரால் தொடர்ந்து வழிபாட்டு வந்தது என்று தொன்று தொட்டு வந்த பழக்கமும் வழக்கமும் காரணமாகத் தெய்வத்தை வழிபடுகிறோம்.

வழிபாட்டில் முதலிடம் பெறுவது துதிகள் எனப்படும் ஸ்லோகங்கள் ஆகும்.  மொழியோ அமைப்போ தெய்வத்தை அணுக முக்யமல்ல.  தெய்வத்திற்கு வடிவும், நிலையும், தோற்றமும் கிடையாதென நம்பினாலும், குல தெய்வம், இஷ்ட தெய்வம் என நம் முன்னோர் கொண்டதையே ஏற்கிறோம்.  ஸ்ரீ சங்கர பகவத் பாதர் முதலிய சான்றோர் இயற்றிய துதிகளையோ வேதமும் புராணமும் தருகிற துதிகளையோ பயன்படுத்துகிறோம்.  பாலனும், பாமரனும்கூட இந்தத் துதிகளால் துதிக்க முடியும்.  இதுவே முழுப் பூஜையின் பலனையும் தரும். 

பூஜை இருவகைப்படும்.  வழிபாட்டுக்குரிய பொருள் அனைத்தும் பெற்றுப் பற்பல உபசாரங்களைச் செய்வது பாஹ்ய பூஜை எனும் வெளிப்படையான முறை. 

உள்ளுணர்வால் அந்தந்த உபசாரங்களைச் செய்வது மானஸ பூஜை.  

வெளிப்பொருளை எதிர்பாராமல் மனத்தால் உருவாக்கிய பொருளைக் கொண்டு மனத்தால் பூஜை செய்வதாக வாயால் துதிப்பது வாசிக பூஜை.

ஸ்ரீ சங்கர பகவத் பாதர் முதலானோர் மானஸ பூஜா ஸ்லோகங்களை தொகுத்துத் தந்துள்ளார்கள்.  நமது உடலும், பொறிகளும், உள்ளமும், நம் வாழ்க்கைக்கு பயன்படுகிற உணவு உடை இருப்பிடம் முதலானவையும் ஐம்பூதங்களாலானவை. 

ஆகாயம் விரிவிற்கும் வளர்ச்சிக்கும் இடம் தருகிறது.  மலர்வதற்கு இந்த விரிவைப் பயன்படுத்திக் கொள்கிற மலர் ஆகாயத்தின் பிரதிநிதி. 

விரிவிற்கேற்ப குறுக்கிலும் நெடுக்கிலும் பரப்புவது வாயு.  மலரின் மனத்தைப் பரப்புவது வாயு.  அதன் அடையாளம் தூபம்.

மணமாவது பூமி, அதன் அடையாளம் சந்தனம் (கந்தம்).

மேல் நோக்கிச் செல்வதும் ஒளியும் அக்னியின் சிறப்பு, அதன் அடையாளம் தீபம்.

கீழ் நோக்கிச் செல்வதும் நிரப்புவதும் ஜலத்தின் சிறப்பு, அதன் அடையாளம் நைவேத்யம்.

இவற்றை கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் என்ற முறையில் இறைவன் தந்ததை இறைவனிடம் ஸமர்ப்பிப்பது ஐந்து உபசாரங்கள் எனப்படுகிறது. இவற்றின் விரிவே 16 உபசாரங்கள், 64  உபசாரங்கள், ராஜோபசாரங்கள், தேவோபசாரங்கள் எனப்படுகிறது.  சில உபசாரங்களை இங்கு காண்போம்.

1.  த்யானம் - ஆவாஹனம்:  தெய்வத்தின் அருளுருவத்தையும், குனச்சிறப்பையும் ஆழ்மனத்தில் பதிப்பதே த்யானமாகும். தொடர்ந்த பயிற்சியினால் உள்ளத்தினுள் தெய்வத்திருவுருவம் தோன்றும்.  அதை உணர்ந்து, இதய கமலத்தின் நடுவில் கொணர்ந்து, அவரை வெளியே வரக்கோரி மூச்சால் வெளிப்படுத்தி, அவரது வழிபாட்டிற்கென வெளியே அமைந்துள்ள விக்ரஹம் முதலியவற்றில் வந்தமரும்படி வேண்டுவது ஆவாஹனமாகும்.

2.  பாத்யம் - அர்க்யம் - ஆசமநீயம் :  இறைவனது திருவடிகளை அலம்பித் துடைத்து விடுதல் பாத்யமாகும்.  நமது அர்ப்பணத்தை ஏற்க அவரது கைகளை அலம்பி துடைப்பது அர்க்யம்.  வாயை அலம்ப நீர் வார்த்து முகத்தைத் துடைப்பது ஆசமநீயம்.  கலச நீரில் உத்தரணியளவு எடுத்து இவற்றிக்கான பாவனையுடன் அருகிலுள்ள கிண்ணத்தில் விடுவர்.

3.  மதுபர்கம் :  தயிர், நெய், தேன், சர்க்கரை இவையாலான த்ரவம்.  இறைவனுக்கு தருகிற பானம் இது.  தேனும் நெய்யும் பாலும் அல்லது தேனும் பாலும் கலந்து தருவதும் உண்டு.

4.  ஸ்நானம், வஸ்த்ரம், கந்தம், அக்ஷதை :  சந்தனத் தைலம் முதலிய நறுமணமிக்க எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பொடி, அரிசிமா, சுகந்திப் பொடி ஆகியவற்றால் அழுக்கு நீக்குதல், வாழைப்பழம், த்ராக்ஷை, பேரீட்சை, தேன், கருப்பஞ்சாறு, (பழச்சாறு) இளநீர், சந்தனக் குழம்பு, கங்கை முதலிய புண்ய நதிநீர், ஸ்ரீருத்ரம், புருஷ ஸூக்தம், ஸ்ரீஸூக்தம் முதலிய அந்தந்த தேவதைக்குரிய வேத மந்த்ரங்கள் ஜபித்து மந்திர சக்தி ஊட்டப் பெற்ற புனித நீர், இவற்றால் நீராட்டுவர்.  நீராட்டியதும் துடைத்து வஸ்த்ரம் தரிக்கச் செய்து, நெற்றியில் சந்தனம், குங்குமமிட்டு அக்ஷதையை சேர்ப்பர். 

பூமாலை அணிவித்து பூக்களால் அர்ச்சனை செய்வது புஷ்ப சமர்ப்பணம்

தசாங்கம், ஊதுவத்தி நறுமணப் புகை காட்டுவது தூபம்

நெய் தீபம் காட்டி வழிபடுவது தீபம்

உணவை இறைவனுக்கு இட்டு வழிபடுவது நைவேத்யம்.

கைகால்களை அலம்பச் செய்து ஆசமனம் செய்வித்து தாம்பூலம் அளிப்பர்.

முழுவதும் கண்டு களிக்க தீபம், கற்பூர நீராஜனம் அவரது அருள் நோக்கு நம் மீது பட்டு, நம் தீவினைகளை சுட்டெரிக்கப்பட்டு மங்கலங்கள் பெருகுவதற்கு. 

துதிகளைச் சொல்லி, வலம் வந்து வணங்குவது ப்ரதக்ஷிணம், நமஸ்காரம்.

வெண்குடை (சத்ரம்) பிடிப்பது, சாமரம் வீசுவது, பாடுவது (சங்கீதம்) முதலிய உபசாரங்களும் செய்வது உண்டு.

பூஜை முடிந்ததும் அவரைத் திரும்ப ஹ்ருதயத்துள் குடிபுகச் செய்வது, ஹ்ருதயாவஸ்தாபனம்.  இதுவே எல்லா பூஜை முறைகளின் உட்கருத்து.

பூஜை நியமங்கள்:  

உடலும் உள்ளமும் வழிபடுகிற தெய்வத்துடன் ஒன்றிப் போவது பூஜையின் பலன்.  கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.  பூஜைக்கு முன் நீராடி தூய ஆடை உடுத்தி நெற்றியில் விபூதி தரித்து சந்த்யா வந்தனம் போன்ற நித்ய கர்மாக்களை முடித்து, பின்னர் பூஜை செய்ய வேண்டும்.

நீராடுகிற நீரில் கங்கை, யமுனை, காவிரி முதலிய புனித நதிகளின் நீர் கலந்துள்ளதாகவும் (கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு, என்ற ஸ்லோகத்தை சொல்லி நீராடலாம்), கெட்ட செயலும், கெட்ட எண்ணமும், கெட்ட பேச்சும் விலக, பாபம் விலக தூய்மை பெற நீரில் உள்ள தெய்வ சக்தி கோரி, அவை உதவுவதாக எண்ணி நீராட வேண்டும்.  

பூஜைக்கு அமர்ந்து குருவருளையும், திருவருளையும் கோரி விநாயகரை விக்னம் விலக்க கோரி அந்தந்த தெய்வ வழிபாடு செய்வதாக ஸங்கல்பம் செய்ய வேண்டும்.

விசேஷ நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தினமும் குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவர்.  பொதுவாக பஞ்சாயதன பூஜை செய்வது வழக்கம்.

பூஜைக்கு மணி, கலசம், சங்கு, தீபம், பூஜைக்கு ஆஸநம், பாத்திரங்கள், அக்ஷதை, சந்தனம், குங்குமம், கலச நீர், பஞ்ச பாத்ரம், உத்தரணி ஆகியவற்றை தயார் செய்து கொள்ளவேண்டும்.

ஆஸநம் :

மான் தோல் ஞானம் தரும்.

புலித்தோல் முக்தி தரும்.

கம்பிளி துயர் நீக்கும்.

பலகை அமைதி தரும்.

ஆஸனத்தின் மீது பருத்தியானால வஸ்த்ரம் இதம் தரும்.

பூக்கள் தவிர்க்க வேண்டியவை:

சூர்யன் - பில்வம், விஷ்ணு - முல்லை, கணேசர்- துளசி, சிவன் - தாழம்பூ, துர்க்கை - அருகம்புல், விஷ்ணு - அக்ஷதை ஆகியவை தவிர்க்க வேண்டியவை.  தனியாக பூஜை செய்யும்போது மட்டும் இந்த நியமம். எல்லா தேவதையும் பூஜிக்கும் போது மற்றும் பல மலர்களுடன் சேர்த்து அர்ப்பணம் செய்யும் போதும் இந்த நியமமில்லை.

வில்வத்திற்கும், துளசிக்கும் நிர்மால்ய தோஷம் இல்லை, நீர் தெளித்து மறுபடி பூஜையில் உபயோகிக்கலாம். புஷ்பத்தைக் காம்பு கீழாகவும் மலர்ப் பகுதி மேலாகவும் இருக்கும்படி சாற்றுவர்.  வில்வ இலையை உட்புறம் இறைவன்மீது படும்படி போடுவர்.  புஷ்பாஞ்சலியாக போடும்போது இந்த நியமமில்லை.

நேற்று பறித்தது, காய்ந்தது, மணம் குன்றியது, பூச்சி அரித்தது, மலராமல் மொட்டாக இருப்பது, இடுப்பில் சுற்றிய ஆடையில் கட்டிக் கொணர்ந்தது, இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியில் பட்டது, இலையின் பின்புறம் வைத்தது, பூஜையில் முன்னதாக பயன்படுத்தியது (வில்வமும், துளசியும் தவிர) இவை வழிபாட்டிற்கேற்றதல்ல.  வாழை நாரில் கட்டிய மாலையே சிறந்தது.  நூலின் சேர்க்கையால் தூய்மை குறையும்.  பூவை நடுவிரலுக்கும், மோதிர விரலுக்கும் நடுவே எடுத்து அர்ப்பணம் செய்வர்.  நிர்மால்யத்தைக் கட்டை விரலும், ஆட்காட்டி விரலும் சேர்த்து எடுத்து அகற்றுவர்.

செண்பகம், தாமரை, மல்லி, ஜாதி, சாமந்தி, நீல அல்லி, செம்பரத்தை, செம்பருத்தி, மந்தாரை இவை எல்லா பூஜையிலும் ஏற்றவை.  ஸ்ரீ கணபதி, சிவபெருமான், லக்ஷ்மி அம்பாள் இவர்களுக்கு வில்வமும், விஷ்ணுவிற்கு துளசியும் ஏற்றது.  கணபதி பூஜை தனித்து பண்ணினால் அருகம்புல், வெள்ளெருக்கு, மந்தாரை, வன்னி இது நல்லது.  முனை உடையாத, குங்குமம், மஞ்சள் கலந்த அரிசியே அக்ஷதை.